
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் விதிகளுக்குப் புறம்பான சுங்கச் சாவடி எதுவும் தமிழ்நாட்டில் இல்லை என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
“60 கிமீ தொலைவுக்குள் இரண்டு சுங்கச் சாவடிகள் இருக்கக்கூடாது என்ற தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல்) விதிகள் 2008 இன் விதிகளை மீறும் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் விவரங்கள் மற்றும் எண்ணிக்கை என்ன?; தமிழ்நாட்டில் இத்தகைய சட்டவிரோத சுங்கச்சாவடிகளை மூட NHAI எடுத்த நடவடிக்கைகள் என்ன?; புதுச்சேரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி மேற்படி விதியை மீறுகிறதா? , அவ்வாறாயின், அதன் விவரங்கள் யாவை?; 2019 இல் வானூர் முன்சிஃப் நீதிமன்றத்தால் அந்த சுங்கச்சாவடி சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு, ஒப்பந்ததாரருக்கு நிதி இழப்பு ஏற்படும் என்ற காரணம் காட்டி NHAI ஆல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறப்பட்டதா?; அப்படியானால், அந்த சுங்கச்சாவடியை மூடுவதற்கு அரசு எடுத்த நடவடிக்கையின் விவரம் என்ன?” ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி எழுப்பினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம்!
அதற்கு மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதில், “தேசிய நெடுஞ்சாலைகள் (NHAI) கட்டண விதிகள் - 2008 இல் இரண்டு சுங்கச் சாவடிகளுக்கு இடையில் 60 கிமீ இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் அதே பகுதியில், மற்றொரு சுங்கச் சாவடியை நிறுவ வேண்டிய தேவை எழுந்தால் அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கும்போது மற்ற சுங்கச் சாவடிக்கும் அதற்கும் இடையிலான தூரம், சாலையைப் பயன்படுத்துவோர் மீதான நிதிச் சுமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு சுங்கச் சாவடியையும் நிறுவுவதற்கு உரிய அதிகாரியின் ஒப்புதல் பெறப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள NHAI சுங்கச்சாவடிகள் எதுவும் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளை மீறவில்லை. மேலே கூறப்பட்டுள்ள NHAI கட்டண விதிகளின்படி மொரட்டாண்டி சுங்கச் சாவடி நிறுவப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், 08.02.2019 தேதியிட்ட வானூர் முன்சிஃப் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன் பிறகு 14.12.2021 அன்று அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.” இவ்வாறு அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.