
குஜராத் சட்டசபை தேர்தலில் தலித் இயக்க போராளியான ஜிக்னேஷ் மேவானி போட்டியிடுகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் அவருக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டு உள்ளது.
புதிய வியூகம்
கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் பா.ஜனதாவை வீழ்த்த புதிய வியூகம் அமைத்து காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
பட்டேல் சமூக மக்களின் இட ஒதுக்கீடு போராட்ட குழு தலைவரான ஹர்த்திக் பட்டேல், தலித் அமைப்பு தலைவரான ஜிக்னேஷ் மேவானி, இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவரான அல்பேஷ் தாக்கூர் ஆகியோருடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது.
வேண்டுகோள்
இந்த நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன், ஜிக்னேஷ் மேவானி சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். வனஸ்கந்தா மாவட்டம் வட்காம் தொகுதியில் இருந்து நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். ‘‘இந்த தேர்தலில் நாம் போராடி வெற்றி பெறுவோம்’’ என்று கூறிய அவர், ‘‘பா.ஜனதாவுடன்தான் எனக்கு பலப் பரீட்சை. எனவே மற்ற கட்சிகள் எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாமல் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்’’ என கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
நேரடி போட்டி
இதற்கிடையில், மேவானியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை நிறுத்தவில்லை. அந்த தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான வகேலா, சுயேச்சையாக போட்டியிடும் மேவானிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று கூறி இருக்கிறார்.
வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்ற நிலையில், வட்காம் தொகுதியில் பா.ஜனதாவுக்கும் மேவானிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா சார்பில் விஜய் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.
மேவானிக்கு டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அல்பேஷ் தாக்கூர் போட்டி
இதற்கிடையில், பிற்படுத்தப்பட்ட சமூக தலைவரான அல்பேஷ் தாக்கூர், ராடன்பூர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் டிக்கெட்டில் போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
வட்காம் மற்றும் ராடன்பூர் தொகுதிகளில் டிசம்பர் 14-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.