பாஜகவில்தான் எதிர்காலம் உள்ளது என அக்கட்சியில் இணைந்த பின்னர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார். பாஜகவில் இணையும் பொருட்டு அவர், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்த அவர், தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜகவில் இணைந்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் அசோன் சவான் இணைந்தார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. பாஜகவில் இருந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க வேண்டும் என்று உணர்ந்தேன். பாஜகவில்தான் எதிர்காலம் இருக்கிறது.” என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அடுத்த பெரிய தலைவரான அசோக் சவான் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலகின் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கிய இந்தியா: மைக்கேல் ஸ்பென்ஸ் புகழாரம்!
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் நானா படோலுடன் அசோக் சவானுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கட்சித் தலைவரின் உழைக்கும் பாணி முன்னாள் முதல்வர் அசோக் சவானை வருத்தப்படுத்தியதாகவும், இது, அவர் கட்சியில் இருந்து விலக வழிவகுத்திருக்கலாம் என்றார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஷங்கர்ராவ் சவானின் மகனான, அசோக் சவானுக்கு நான்டெட் பகுதியில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அவரது இந்த மாற்றம் வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. மேலும், பாஜகவில் இணைந்துள்ள அசோக் சவானுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.