
புதுடெல்லி, அக்.19-
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ‘துல்லிய மின்னல்’ தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவத்துடன் ஒப்பிட்டு, பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்தார்.
உரி ராணுவ முகாம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
‘துல்லிய மின்னல் தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ரகசிய தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பாகிஸ்தான் ராணுவத்தினர் உள்ளிட்ட பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் ராணுவம்
சதீவிரவாதிகளுக்கு எதிராக, குறிப்பாக பாலஸ்தீன கொரில்லா படையினருக்கு எதிராகஇ இது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது.
நேற்று இமாசல பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய ராணுவத்தினரின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கையை, இஸ்ரேல் ராணுவத்தினரின் திறமைக்கு ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.
சளைத்தவர்கள் அல்ல
இமாசல பிரதேசத்தை ‘வீரம் விளைந்த மண்’ என்று புகழாரம் சூட்டிய மோடி, ‘‘இப்போதெல்லாம் நமது வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைகளை இந்த நாடே வியந்து பாராட்டிக்கொண்டு இருக்கிறது.
முன்பு இஸ்ரேல் ராணுவம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது இந்திய ராணுவம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நாம் பார்க்கிறோம்’’ என்றும் கூறினார்.
ஒரு பதவி ஒரே பென்சன்
இந்திய ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு இந்தப் பேரணியில் மோடி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர், கடந்த 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த முன்னாள் ராணுவத்தினருக்கான ‘‘ஒரு பதவி ஒரே பென்சன்’’ கோரிக்கையை நிறைவேற்றியது, தனது தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
காங்கிரசின் ஊழல்
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் இமாசல பிரதேசத்தில் 3 நீர்மின் நிலைய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பா.ஜனதா முதல்-அமைச்சர்கள் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை செய்து கொடுத்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஊழல் சேற்றில் ஆழ்ந்து இருப்பதாகவும், இதில் இந்த மாநில முதல்-அமைச்சர் (வீரபத்ர சிங்) குறித்து நான் எதுவும் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டுமா? என்று கூறி தாக்குதல் தொடுத்தார்.