
ஜம்மு, அக்.19-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
இரவில் தாக்குதல்
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டம், நவுஷெரா லாம் பட்டாலியன் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தினார்கள்.
பதிலடி
துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் நடந்த இந்த தாக்குதல் நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் திருப்பித் தாக்கி தக்க பதிலடி கொடுத்ததாக. இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
29-வது முறையாக
இந்திய ராணுவத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கைக்குப்பின், பாகிஸ்தான் ராணுவத்தின் 29-வது போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகும் இது.