
டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பல்கலைக்கழக கணினி மையம் உட்பட மூன்று கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், பல்கலைக்கழகத்தில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.
அதன் பின்னர், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய இளைஞர்கள் மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் இலக்கு. டெல்லி பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகமாக இல்லாமல் ஒரு இயக்கமாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். ஒவ்வொரு இயக்கத்திலும் இந்த பல்கலைக்கழகம் வாழ்ந்திருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் ஒவ்வொரு இயக்கத்திற்கும் உயிர்மூச்சாக இருந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அமிர்த மஹோத்சவ் கொண்டாடப்படும் நேரத்தில் டெல்லி பல்கலைக்கழகம் தனது 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பல்கலைக் கழகங்களும், கல்வி நிறுவனங்களுமே ஒரு நாட்டின் சாதனைகளின் பிரதிபலிப்பு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் 100 ஆண்டு பயணத்தில் பல வரலாற்று மைல்கற்கள் உள்ளன. அது ஒரு நபராக இருந்தாலும் அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதன் தீர்மானங்கள் நாட்டிற்காக இருந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தின் வெற்றியும் நாட்டின் வெற்றிகளுடன் இணைந்தே பயணிக்கிறது என்றார்.
நான் ராஜினாமா செய்ய மாட்டேன்: மணிப்பூர் முதல்வர் திட்டவட்டம்!
“நீண்ட காலமாக மாணவர்களுக்கு எதைக் கற்பிக்க வேண்டும் என்பதில்தான் கல்வியின் கவனம் இருந்தது. ஆனால், மாணவர்கள் எதைக் கற்க விரும்புகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். கல்வியின் எதிர்காலக் கொள்கைகள் மற்றும் முடிவுகளால் இன்று இந்திய பல்கலைக்கழங்களுக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்தகைய அங்கீகாரங்களை பெறும் இந்தியப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் மாணவர்கள் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கைக்கு முன் வேலைவாய்ப்பை மட்டுமே யோசித்தனர். அதாவது கல்லூரிகளில் சேர்க்கை என்றால் பட்டம், பட்டம் என்றால் வேலை என்று கல்வி இத்துடன் மட்டுப்படுத்தப்பட்டது. இன்று இளைஞர்கள் அதனை விரும்புவதில்லை. புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். சொந்தமாக ஏதாவது செய்ய விருப்பம் காட்டுகிறார்கள்.” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிகளுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார். மெட்ரோ ரயிலில் சக பயணிகளிடம் சிரித்துப் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களின் கருத்துக்களை கேட்டு, தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.