
மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. மைதேயி, குகி ஆகிய இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. மணிப்பூர் கலவரத்தில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருநங்கைகள் குழந்தையைத் தத்தெடுக்கக் கூடாதா? பிரித்திகா தாக்கல் செய்த மனு - விசாரணை முடிவு என்ன?
மணிப்பூரில் இரு மாதங்களாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் பைரன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்து பைரன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளார் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்பது போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு, மணிப்பூரின் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறி, மணிப்பூரில் இயல்பு நிலையைக் கொண்டுவருமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டனர். மேலும், பைரன் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக மணிப்பூரைச் சேர்ந்த ஒன்பது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மோடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் பைரன் சிங்கை ராஜினாமா செய்யக் கோரி மத்திய பாஜக அரசு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.