பசு குண்டர்களை கண்காணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

First Published Sep 22, 2017, 9:45 PM IST
Highlights
The Supreme Court has issued notices to 22 states including Tamil Nadu where action is being taken to observe the cows


பசு குண்டர்களை கண்காணிக்க மாவட்டந்தோறும் ஒரு டி.எஸ்.பி. அந்தஸ்தில் தனி போலீஸ் அதிகாரி நியமிக்க வேண்டும் என்று கடந்த 6-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மீது எடுத்துள்ள நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று 22 மாநில அரசு தலைமைச் செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மனுத் தாக்கல்

நாடுமுழுவதும் பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசு குண்டர்கள் பசு மாடுகளை வாகனங்களை ஏற்றிச் செல்பவர்கள், பண்ணையாளர்கள், மாட்டிறைச்சி வைத்திருப்போர், கொண்டு செல்பவர்கள் என பலர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும், அதனால், சிலர் கொல்லப்பட்ட துயரங்களும் நடந்து வருகின்றன.

இதை தடுக்கக் கோரி மகாத்மா காந்தியின் கொள்ளுபேரன் துஷார் காந்தி இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

உத்தரவு

இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் கடந்த 6-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், “ பசு குண்டர்களை கண்காணிக்க அனைத்து மாநில அரசுகளும், ஒவ்வொரு மாவட்டத்திலும் டி.எஸ்.பி. அந்தஸ்தில் ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். அப்பாவி மக்கள் மீது பசு குண்டர்கள் தாக்குதல் நடத்தாமல்  தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு இருந்தது.

அறிக்கை

இந்த உத்தரவின் அடிப்படையில், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஜார்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கையை அறிக்கையைாக நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மஹாராஷ்டிரா, பீகார் மாநிலங்களும் இன்றுக்குள்(நேற்று) தாக்கல் செய்யப்படும் என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தனர்.

மீண்டும் விசாரணை

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வாலிகர், ஓய். சந்திரசூத் ஆகியோர் கொண்ட அமர்வு  நேற்று மீண்டும் விசாரணை செய்தது.

அக்.13-ந்தேதிக்குள்

அப்போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், “ பசு குண்டர்களை கண்காணிக்க மாநில அரசுகள் மாவட்டந்தோறும் தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என்று நாங்கள் கடந்த 6-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் மீது மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்ைக என்ன?. இதில் யாரும் அவர்களின் பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டி உத்தரவுகளை பிறப்பிப்போம்.

இந்த 5 மாநிலங்களைத் தவிர மீதமுள்ள 22 மாநிலங்கள் அக்டோபர் 13-ந்தேதிக்குள் நாங்கள் 6-ந்தேதிபிறப்பித்த உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து,  இந்த விவகாரம் துஷார் காந்தி தாக்கல் செய்த பொதுநல மனு அக்டோபர் 31-ந்தேதிமீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது

click me!