
கேரள மாநில சிறையில் உள்ள கைதிகளுக்கும் ஆதார் எண் கிடைக்கும் வகையில், மாநில சிறைத்துறை ஆதார் எண் வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆதார் எண் வழங்குவதை இலக்காகக் கொண்டு ‘உதய்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் சிறை கைதிகளுக்கு மட்டும் கிடைக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக மாநில சிறைத்துறை இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.
3,500 கைதிகள்
இதற்காக மாநிலத்தில் உள்ள சிறைகளில் தண்டனைக் கைதிகளாக இருக்கும் 3,500 கைதிகளுக்கு முதல்கட்டமாக ஆதார் எண் வழங்கநடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டபின், அந்த எண் குறித்த விவரங்கள் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்படும். அந்த கைதிகள் தண்டனை காலம் முடிந்தபின் அவர்களிடம் இந்த ஆதார் எண் ஒப்படைக்கப்படும்.
படிப்படியாக வழங்கப்படும்
இது குறித்து மாநில சிறைத்துறை டி.ஜி.பி. ஆர். ஸ்ரீலேகா கூறுகையில், “ கைதிகளுக்கு ஆதார் எண் வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. கடந்த வாரம் பூஜாபுரா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 27 தண்டனைக் கைதிகளுக்கு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், சிறையில் உள்ள கைதிகளுக்கும் ஆதார் எண் கிடைக்கும். விரைவில் மாநிலத்தில் உள்ள அனைத்து தண்டனை கைதிகளுக்கும் படிப்படியாக ஆதார் எண் வழங்கப்படும் ’’ என்று தெரிவித்தார்.
எப்படி வழங்கப்படுகிறது?
இதன்படி, சிறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகள் எத்தனை பேருக்கு ஆதார் இருக்கிறது , இல்லை என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். அந்த விவரங்கள் அடிப்படையில் கைதிகளின் விவரங்கள், வீட்டு முகவரி, பள்ளி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டு, சிறை கண்காணிப்பாளரால் ஆய்வு செய்யப்பட்டு அதன்பின் ஆதார் எண் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஆதார் எண் பதிவு செய்யும் பணியில் மாநில அரசின் அக்ஷய மையம், ஒவ்வொரு சிறைக்கும் சென்று இந்த பணியை மேற்கொண்டு வருகிறது.