
உத்திரபிரதேச சுற்றுலா குறிப்பேட்டில் இருந்து தாஜ்மஹாலை நீக்கி அம்மாநில அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதையடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து உ.பி முதலமைச்சர் ஆதித்யநாத், நமது கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும் இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது தான் தாஜ்மஹால் எனவும் தெரிவித்தார்.
சங்கீத் சோமின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தாஜ்மஹால் சுற்றுப்பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சாதியவாதிகளே எனது ஆக்ரா பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர்கள் மாநிலத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் எதையும் செய்வதில்லை எனவும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்குவது ஆக்ரா எனவும் தெரிவித்தார்.
இங்குதான் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி, சிகந்திரா மற்றும் இதிமாத் உத் தவுலா வளைவு உள்ளிட்ட பழமையான சுற்றுலா தலங்கள் நிறைய உள்ளதாக குறிப்பிட்டார்.
இங்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாகவும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.