
இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து, வங்காளதேசத்தின் குல்னா நகரம் வரை செல்லும் ‘பந்தன் எக்ஸ்பிரஸ்’ ரெயில்சேவை தொடங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய மூவரும்வீடியோ கான்பிரன்சிங் மூலம் இதை தொடங்கி வைத்தனர்.
வாரத்தில் ஒருநாள்
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த பந்தன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வரும்16ந் தேதி முதல் முறைப்படி இயங்கும். வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படும்.
கொல்கத்தாவில் இருந்து புறப்படும் இந்த பந்தன் எக்ஸ்பிரஸ் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. இந்திய வங்காளதேச எல்லைப்பகுதிகளான பினேபோல், பெட்ராபோல் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
172 கி.மீ
கொல்கத்தா முதல் குல்னா வரை மொத்தம் 172 கிமீ தொலைவை 4 மணிநேரம் 50 நிமிடங்களில் இந்த ரெயில் கடக்கிறது.குல்னாவில் இருந்து நண்பகல் 1.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கொல்கத்தாவுக்கு மாலை 6.10க்கு வந்து சேரும்.
ஏற்கனவே இந்தியா- வங்காளதேசம் இடையே மைத்ரி எஸ்பிரஸ் எனும் ரெயில் வாரத்தில் 6 நாட்கள் இரு நாடுகள் தரப்பிலும் இயக்கப்பட்டு வருகிறது.
உறவு வலுவடையும்
இந்த ரெயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது -
இந்த உன்னதமான தருனத்தில் இரு நாட்டு மக்களுக்கும் நான் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். இரு நாடுகளின் நட்புறவுகள் இந்த ரெயில் சேவை மூலம் மேலும் வலுவடையும். அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான உறவுகள் அண்டை நாடுகள் போல் இருக்க வேண்டும். மரபுரீதியான சந்திப்பு, பேச்சுகளின் போது கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது’’ என்றார்.
கனவு நனவாகியுள்ளது
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா பேசுகையில், “ ரெயில் சேவையை தொடங்கி வைத்தது, இரு பாலங்களை திறந்து வைத்தது ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை அடுத்த கட்டத்துக்கு செல்ல சிறந்த நாளாகும். இரு நாட்டு மக்களின் கனவாக இருந்த ரெயில் சேவை நனவாகியுள்ளது’’ என்றார்.