இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் 74 % வாக்குப்பதிவு - நாட்டின் முதல், மூத்த வாக்காளர் வாக்களித்தார்

 
Published : Nov 09, 2017, 08:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் 74 % வாக்குப்பதிவு - நாட்டின் முதல், மூத்த வாக்காளர் வாக்களித்தார்

சுருக்கம்

In the state assembly yesterday in Himachal Pradesh 74 percent of the votes were recorded.

இமாச்சலப்பிரதேச  மாநிலத்தில் நேற்று நடந்த சட்டசபைத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் 74 சதவீதம் வாக்குகள் பதிவானது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்களித்தனர்.

இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 72 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை அதைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகரித்து 74 சதவீதம் பதிவாகி இருக்கிறது.

68 தொகுதிகள்

இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 9ந்தேதி(நேற்று) தேர்தல் நடத்தப்பட்டது.

முதல்முறையாக

இந்த தேர்தலில் 7 ஆயிரத்து 525 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், முதல்முறையாக வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

50 லட்சத்து 25 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களிக்க  7 ஆயிரத்து 525 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதில் 2500 வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமிரா’ மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்தல் பணியில் 37 ஆயிரத்து 605 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

17 ஆயிரம் போலீசார்

தேர்தலை கட்டுக்கோப்பாகவும், நியாயமாகவும் நடத்தும் பொருட்டு 17 ஆயிரத்து 850 போலீசார், ஊர்காவல்படையினர், 65 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். சிம்லா நகரில் உள்ள ராம்பூர் பகுதி வாக்குச்சாவடியில்  முதல்வர் வீரபத்திர சிங், தனது மகன்விக்ரமாதித்யாவுடன் வந்து ஓட்டளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.

பா.ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால், தனது சொந்த கிராமமான சமீர்பூரில் ஓட்டளித்தார். மேலும், பா.ஜனதா எம்.பி. அனுராக் தாக்கூரும் வாக்களித்தார்.

மாலை 6.30 மணி வரை நடந்த வாக்குப்பதிவின் முடிவில் மாநிலத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்று துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.பகுஜன் சமாஜ் கட்சி 42 இடங்களிலும், அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 14 இடங்களிலும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டன.

நாட்டின் மூத்த வாக்காளர் வாக்களித்தார்!

நாட்டின் மூத்த வாக்காளர் என்ற பெருமையைக் கொண்ட ஷியாம் சரண் நேகி, வாக்களித்தார். இவர் அங்குள்ள கின்னாஊர்என்ற மாவட்டத்தின் கல்பா என்ற இடத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

1951-ம் ஆண்டு தனது முதல் வாக்கினைப் பதிவு செய்த ஷியாமுக்கு தற்போது 100 வயதாகிறது. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அதுமட்டுமல்லாமல் இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தனது வாக்கினைப் பதிவு செய்தது சிறப்பம்சமாகும்.

இந்தத் தேர்தலின்போது தனது இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடி வரை வந்து ஷியாம் வாக்களிக்கும் விதமாக அவருக்கு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் வாக்குச்சாவடியில் கவுரவிக்கப்பட்டார்.

38 நாட்கள் காத்திருக்க வேண்டும்

இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முடிந்துவிட்டாலும் இதன் முடிவு தெரிய இன்னும் 38 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஏனென்றால், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபின் இருமாநிலங்களுக்கு ஒன்றுபோல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ந்தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. குஜராத்தில் 2 கட்டங்களாக டிசம்பர் 9-ந்தேதி, 14 ந்தேதி தேர்தல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தின் தேர்தலை எதிர்பார்த்து, இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

விசா தேதி முடிந்தால் தங்க முடியாதா? அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!
அவள் நரகத்துக்கே போகட்டும்.. நிதிஷ் குமாரின் செயலுக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர்!