
வியாழக்கிழமை இன்று இந்தியாவின் பல பகுதிகளில் வருமான வரித் துறையினர் திட்டமிட்டு சோதனைகளை மேற்கொண்டனர். இதில், தில்லியில் மேற்கொண்ட சோதனையில் ராகேஷ் ஜெயின் என்பவர் வீட்டிலும் அலுவலகத்திலும் உறவினர் வீடுகளிலும் நடத்திய சோதனையில் ரூ.300 கோடிக்கான கணக்கில் காட்டப்படாத வருமானத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
மத்திய அரசின் ஆரோகிய திட்டமான சிஜிஹெச்எஸ்ஸில், மருந்துகளை விநியோகிக்கும் மிகப் பெரிய விநியோகஸ்தராக இருக்கிறார் ராகேஷ் ஜெயின். மத்திய அரசின் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த திட்டத்தின் முக்கிய விநியோகஸ்தரான ராகேஷ் ஜெயின் வீட்டிலும் அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவரது மருகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டன. தில்லி என்சிஆர் சாலையில் உள்ள, சிஜிஹெச்எஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய மால் ஒன்றில் இவர் மேற்கொண்ட முதலீடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப் பட்டுள்ளது.
இதனிடையே ரூ.300 கோடிக்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்து ராகேஷ் ஜெயின் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, இன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகான போலி நிறுவனங்கள் கண்டறியப் பட்ட விவகாரத்தில், போலி நிறுவனங்களைப் பதிவு செய்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடந்தன. இந்நிலையில் தில்லியில் உள்ள ராகேஷ் ஜெயினும் இந்த சோதனையில் சிக்கினார்.