
வக்கீல் நிதியமைச்சராகும்போது, டி.வி.நடிகை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராகும்போது, டீ.விற்றவர் அமைச்சராகும்போது ஜி.எஸ்.டி. பற்றி நான் ஏன் பேசக்கூடாது? என்று பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா சொந்தகட்சியையே வெளுத்து வாங்கியுள்ளார்.
பிரதமர் மோடி சிறுவயதில் தந்தையுடன் சேர்ந்து டீ விற்பனை செய்ததை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களுக்கு முன் “மீம்ஸ்” வெளியிட்டு இருந்தனர். இதற்கு பாஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அந்த விளம்பரங்களை அகற்றியது.
இந்நிலையில், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே பிரதமர் மோடியையும், நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, அமைச்சர் ஸ்மிருதி இராணியையும் கிண்டல் செய்துள்ளது அந்த கட்சிக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
டெல்லியில் நேற்று நடந்த நூல் வெளியிட்டு விழாவில் பா.ஜனதா எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் பேசியதாவது-
பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக அடிக்கடி ஒரு வசனம் பேசுவார். நாங்களும் லஞ்சம் வாங்கமாட்டோம்; மற்றவர்களையும் வாங்க அனுமதிக்கமாட்டோம் என்று பேசுவார். நான் அரசியல் கலப்பில்லாமல் பேசுகிறேன், இப்போது அந்த வார்த்தை நானும் வாழமாட்டேன், மற்றவர்களையும் வாழ அனுமதிக்கமாட்டேன் என்று மாறிவிட்டது.
நாட்டில் இப்போது உள்ள சூழல் எப்படி இருக்கிறது என்றால், ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆதரவு அளித்தால், ஆதரவு அளிப்பவரை தேசத்துரோகி என்று அழைக்கிறார்கள. அவ்வாறு யாருக்கேனும் ஆதரவு அளிக்க விரும்பினால், தேசத்துரோகி எனும் பட்டத்தை சுமக்க தயாராகிக் கொள்ளுங்கள்.
இன்று மத்திய அமைச்சரவை முகஸ்துதி செய்பவர்கள் நிறைந்த இடமாக இருக்கிறது. 90 சதவீதம் பேரை மக்களுக்கு யாரென்றே தெரியாது. அவர்கள் நாடாளுமன்றத்துக்கு ஏதேனும் புதிதாக, ஆக்கப்பூர்வமாக செய்ய வரவில்லை. தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள வருகிறார்கள்.
ஒரு வழக்கறிஞர் நிதிஅமைச்சராகும்போது, டி.வி நடிகை மனிதவளத்துறை அமைச்சராகும்போது, டீ விற்றவர்… நான் அதற்கு மேல் பேசவக்கூடாது. இவர்கள் அமைச்சராகும் போது, நான் ஏன் ஜி.எஸ்.டி. வரிகுறித்தும், நாட்டின் பொருளாதாரம் குறித்தும் பேசக்கூடாது.
நாட்டின் சகிப்பின்மை வளர்ந்து வருகிறது. ரூபாய் நோட்டு தடையின் பாதிப்புகள் இன்னும் நாட்டில் மறையவில்லை. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர், தொழிற்சாலைகள் மூடப்பட்டன, சிறு வர்த்தகர்கள், அன்றாடம் காய்ச்சிகளுக்கு வேலை இல்லாமல் போனது. ஜி.எஸ்.டி. மக்களை பிழிந்து எடுக்கிறது.
நான் இளைஞர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும், வழிம்புநிலை சமூகத்தினருக்காகவும், நலிந்த பிரிவினருக்காவும் பேசாவிட்டால், நான் அரசியலில் இருந்து என்ன பயன்?.
நாட்டில் என்ன நடக்கிறது?.
பசு குண்டர்கள் மக்களையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் கொல்கிறார்கள். இப்போது நீதிபதிகளையும் கொல்கிறார்கள். மக்கள் சக்தியைக் காட்டிலும், பணத்தின் வலிமை பெருகிவிட்டது. என்னைப் போன்றவர்கள் வெளியே வந்து கேள்வி கேட்க வேண்டும்.
நான் எனது சொந்தக் கட்சிக்கும்,அரசின் கொள்கைகளுக்கும் விரோதமாக பேசுகிறேன் என சிலர் கூறுகிறார்கள். நான் அமைச்சராக ஆக்கப்படவில்லை. நேர்மையாகச் சொல்கிறேன், எனக்குஅந்த விருப்பம் இல்லை, அமைச்சசராக வேண்டும் என்று எந்த விருப்பமும் இல்லை. இன்று நிலையில், எந்த அமைச்சரும் சொந்தமாக முடிவு எடுக்கவில்லை, அவர்கள் தங்களின் பதவியையும், தங்களையும் பாதுகாக்க முகஸ்துதியில் ஈடுபடுகிறார்கள்.
நான் பா.ஜனதாவில் சேர்ந்தது விலகுவதற்காக அல்ல. நான் எனது வார்த்தைகளை குறைத்துக்கொண்டால், சவால்களை சந்திக்க முடியாது. நான் தொடர்ந்து 2 பேர் கொண்ட ராணுவத்தை(மோடி அமித் ஷா) தனிநபராக எதிர்த்து போராடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.