
தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக போராட்டம் என்று எழுதி வைத்துவிட்டு ராஜஸ்தானில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரலாற்று திரைப்படமான பத்மாவாதி படத்துக்கு எதிராக பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பத்மாவதி திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீசாவதாக இருந்தது. இந்த நிலையில் பத்மாவதி படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகை தீபிகா, ராணி பத்மாவதியாக நடித்துள்ளார்.
பத்மாவதி படத்துக்கு எதிராக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் தடை செய்துள்ளன. மேலும் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகேயுள்ள நாகர்கர் கோட்டையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தூக்கு போட்டு தற்கொலை செய்ததவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்னர். இது குறித்து ஜெய்ப்பூர் வடக்கு பகுதி இணை ஆணையர் சத்யேந்திர சிங் கூறும்போது, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை மீட்டுள்ளோம். தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பாறையின் மீது, உருவ பொம்மை, நாங்கள் எரிக்காமல் தூக்கில் போடுவோம். பத்மாவதிக்கு எதிரான போராட்டம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.