
90 ஆண்டுகளுக்கு பின் இந்திய வனச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, காடுகளில் இல்லாத பகுதியில் பயிர் செய்யக்கூடியதாக மூங்கில் மாற்றப்பட்டு மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.
இந்த சட்டத்திருத்தம் மூலம் இனி தனிமனிதர் எவரும் வர்த்தகம் செய்யவும், சொந்த காரணங்களுக்காகவும் மூங்கிலை வெட்டி, எங்கும் கொண்டு செல்லலாம். வனத்துறையினர் கெடுபிடிகளும், முன்அனுமதியும் அவசியமில்லை.
இதற்கு முன் 1927ம் ஆண்டு இந்திய வனச்சட்டத்தின்படி, மூங்கில் மரத்தை தனி ஒருவர் சொந்த நிலத்தில் வைத்து இருந்தால் கூட அதை வெட்டுவதற்கும், விற்பனை செய்வதற்கும் முறைப்படி வனத்துறையினர் அனுமதியும், மாவட்ட ஆட்சியர் அனுமதியும் பெற வேண்டும். இனி அது தேவையில்லை.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய வனச்சட்டத்தின் திருத்தத்த அவசரச் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த அவசரச் சட்டத்தின் மூலம் நாட்டின் மூங்கில் விவசாயம் அதிகரிக்கும், அதன் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரித்து, 2022ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயரும், வேலைவாய்ப்பு பெருகும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்சவர்த்தன் கூறுகையில், “ இந்திய வனச்சட்டத்தில் திருத்தம் செய்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க அவசரச்சட்டத்தை பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம், மூங்கில் மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, காடுகள் அல்லாத பகுதிகளில் பயிர்செய்யலாம் என மாற்றப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் தேவைக்குஏற்றார்போல் மூங்கிலை எங்கு வேண்டுமானும் கொண்டு செல்லலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் மூங்கில் அடிப்படையிலான தொழில்கள் வளர்ச்சி அடையும்” எனத் தெரிவித்தார்.
நாட்டில் மூங்கில் தொடர்பான தொழில்களில் மட்டும் 2 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். மூங்கிலை வனப்பட்டியலில் இருந்து நீக்கியதன் மூலம் இனிவரும் காலங்களில் மூங்கில் எளிதாகக் கிடைக்கும், அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
ஒரு டன் மூங்கில் இருந்தால், 350 நாட்களுக்கு ஒரு மனிதருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மூங்கில் தேவை ஆண்டுக்கு 2.8கோடி டன்ஆகும். உலகளவில் மூங்கில் பயிர்செய்தலில் 16 சதவீத பங்களிப்பை செய்து வரும் இந்தியா, சந்தை வளர்ச்சியில் 6 சதவீதம் மட்டுமே உள்ளது. இதை அதிகரிக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.