திருடர்களிடம் இருந்து முதலாளியின் புறாக்களை காக்க “உயிர் தியாகம் செய்த குரங்கு”...

First Published Nov 24, 2017, 1:53 PM IST
Highlights
Monkey In Kolkata Gave His Life To Save Owners Pigeons


கொல்கத்தாவில் முதலாளி வளர்த்து வந்த புறாக்களை திருடர்களிடம் இருந்து காத்து, அவர் வளர்த்த குரங்கு உயிர்தியாகம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவின் வடக்குப்பகுதியான கோசிபோர் உதயபட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்கி யாதவ்(வயது22). இவர் தனது வீட்டு மாடியில் ஏராளமான விலை உயர்ந்த புறாக்களை வளர்த்து வந்தார். அதற்கு பாதுகாவலாக ஒரு குரங்கையும் வளர்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சில திருடர்கள் அந்த புறாக்களை திருட முயற்சித்துள்ளனர். இதைப் பார்த்த அந்த குரங்கு திருடர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து புறாக்களை காக்க முயன்றுள்ளது. இதனால், ஆத்திரமுற்ற திருடர்கள் குரங்கின் இருகால்களையும் வெட்டிவிட்டு, தப்பினர்.

 காலையில், மாடிக்கு வந்த பார்த்த விக்கி யாதவ், குரங்கு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு குரங்கை கொணஅடு சென்றனர். ஆனால், குரங்கு அதிகமான ரத்தப்போக்கால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால், விக்கியாதவ் கோசிபயர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனது புறாக்களை இதற்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த முகம்மது நசீம்(வயது22) என்பவர் திருட முயற்சித்து அதைத் தான் தடுத்துள்ளதால், அவர் மீது சந்தேகம் இருப்பதாகத் புகாரில் தெரிவித்தார்.

இதனால், போலீசார் நசீம் அவரின் கூட்டாளிகளை அழைத்து நடத்திய விசாரணையில், அவர்கள்தான் புறாக்களை திருட முயற்சித்தபோது, குரங்கின் தாக்குதல் தாங்கமுடியாமல், அதன் கால்களை கத்தியால்வெட்டிவிட்டு தப்பித்து வந்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, முகம்மது நசீம் அவரின் நண்பர்கள் மீது இந்திய தண்டனைப்பிரிவு 429 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் துணைகமிஷனர் சுபாங்கர்  சின்ஹா சர்கார் கூறுகையில், “ முதலாளியின் புறாக்களை காக்க அந்த குரங்கு திருடர்களிடம் கடுமையாக போராடியுள்ளது. அவர்களை கடிக்கவும் செய்துள்ளது. இதைத் தாங்க முடியாத திருடர்கள் புறாக்களை எடுக்க முடியாத விரக்தியில் குரங்கின் கால்களை வெட்டிவிட்டனர். 

தனது இயலாமையை முதலாளியிடம் சொல்ல தெரியாத அந்த குரங்கு பாவம், ரத்தபோக்கால் பரிதாபமாக இறந்துள்ளது. குரங்கின் உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்தபின், இவர்கள் மீது திருடமுயற்சித்தல், வனவிலங்குகளை கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

click me!