
பெங்களூரு நகரில் வரும் 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பாலிவுட் திரைப்பட கவர்ச்சி நடிகை சன்னி லியோனை அழைத்து வர கர்நாடக அரசு அனுமதி மறுத்துள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ‘சன்னி நைட் இன் பெங்களூரு நியு இயர் 2018’ என்ற நிகழ்ச்சி வரும் 31-ந்தேதி இரவு நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை சன்னி லியான் கலந்து கொள்வதை பெங்களூரு நகரில் ஏராளமான இளைஞர்கள் எதிர்பார்த்து, டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.
ஆனால், கன்னட ரக்சன வேதிகா அமைப்பினர் சன்னி லியோன் பெங்களூரு நகருக்குள் வந்தால் கலாச்சார சீர்கோடு வந்துவிடும் எனக் கருதி கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சன்னி லியோனின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சன்னி லியோன் பெங்களூரு நகருக்குள் வரத் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆர். ராமலிங்கா ரெட்டி கூறுகையில் “ நடிகை சன்னி லியோனை அழைத்து வர அரசு அனுமதி அளிக்கவில்லை. அவர் வருவதால் கன்னட அமைப்புகளால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும். கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, எம்.ஜி. சாலையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை கருத்தில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொச்சி நகரில் இதுபோல் சன்னி லியோன் வந்தபோது, அவரின் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் வந்து, உணர்ச்சி மிகுதியில் இருந்ததால், போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆதலால், கொச்சி போலீசாரிடம் இருந்து சில கருத்துக்களைக் கேட்டு முடிவுகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சன்னி லியான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை நடத்தும் ‘வொயிட் ஆர்சிட்’ ஓட்டல் நிர்வாகிகள் கூறுகையில், “ போலீசார் தரப்பில் இருந்து எங்களுக்கு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை. இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யும் முன், காத்திருப்போம்.
நடிகை சன்னி லியோன் வருவதால், கன்னட அமைப்புகளுக்கு என்ன பிரச்சினை என்பதை தெரியவில்லை. நிகழ்ச்சிகள் சட்டவிதிகள் படியே நடக்கும்’’ என்றார்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அரசின் உத்தரவுகளுக்காக காத்திருக்கிறோம். உள்துறை அமைச்சகம், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வின்படி, சன்னி லியோன் பெங்களூரு வர அனுமதி அளிக்கப்படாது என்றே தெரிகிறது’’ என்றார்.