
கேரள மாநில அரசு நடத்திய ‘ஓணம் பம்பர் லாட்டரி’ குலுக்கலில் முதல் பரிசான ரூ.10 கோடி டிரைவர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
ஓணம் பம்பர் லாட்டரி
கேரளாவில் கடந்த மாதம் முடிந்த ஓணம் பண்டிகையின் போது, மாநில அரசு ‘திருவோணம் பம்பர்-2017’ லாட்டரி என்று அறிமுகப்படுத்தியது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடியாகும். இந்த லாட்டரியின் குலுக்கல் வெள்ளிக்கிழமை முடிந்த நிலையில், பரிசு விழுந்த லாட்டரி சீட்டின் எண் குறித்து அதிகாரிகள் அறிவித்தனர்.
ரூ.10 கோடி பரிசு
இதில் ‘AJ2376’ என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.10 கோடி கிடைத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, லாட்டரி விற்கப்பட்ட கடையின் முகவரியை அதிகாரிகள் விசாரித்த போது,அது மலப்புரம் மாவட்டம், பரப்பணங்காடியில் உள்ள ஐஸ்வர்யாலாட்டரி ஏஜென்சி என்பது தெரியவந்தது.
வதந்திகள்
ஆனால், லாட்டரி வாங்கியவர் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், பரிசு வென்றவர் குறித்து ஏராளமான வதந்திகளும், சமூகவலைதளத்தில் பல்வேறுதரப்பினரின் புகைப்படங்களும் பரவின.
டிரைவர்
இந்நிலையில், பரப்பணங்காடியில் உள்ள பெடரல் வங்கிக்கு நேற்று சென்ற முஸ்தபாமூட்டாதரம்மாள் (வயது48) என்ற டிரைவர் முதல்பரிசான ரூ.10 கோடி வென்ற லாட்டரி சீட்டை மேலாளரிடம் ஒப்படைத்தார்.
இந்த விவரத்தை முதலில் ஊடகங்களிடம் தெரிவித்தால் மக்கள் கூட்டம் கூடும் என்பதால், அதை தெரிவிக்காமல் வங்கி அதிகாரியிடம் முஸ்தபா தெரிவித்தார்.
இதையடுத்து, முஸ்தபாவின் பெயர், ஆதார் எண், முகவரி, லாட்டரி சீட்டு அசலானது தானா என்பதை ஆய்வு செய்த வங்கி அதிகாரி முதல் பரிசுக்குரிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நடுத்தர குடும்பம்
பரப்பணங்காடியில் ‘பிக் அப் வேன்’ டிரைவரான முஸ்தபா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் குடும்பத்தில 5 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது ஒரு வாகனத்தில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
ரூ.10 கோடி பரிசு வென்ற மகிழ்ச்சியில் முஸ்தபா நிருபர்களிடம் கூறுகையில், “ என்னுடைய தேங்காய் வியாபாரத் தொழிலை இந்த பணத்தின் மூலம் விரிவுபடுத்துவேன். சொந்தமாக சிறிய வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசு கிடைக்கும் என நம்பினேன்’’ என்றார்.