
பா.ஜனதா கட்சியைப் பொருத்தவரை, அரசியல் என்பது வாக்குகளுக்காக இல்லை. நாட்டின் வளர்ச்சிக்குதான் முன்னுரிமை அளிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகப் பேசினார்.
ரூ. ஆயிரம் ஜோடி
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு ரூ. ஆயிரம் கோடி வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
1800 ஏக்கர் பசுமேளா
தனது பயணத்தின் 2-வது நாளான நேற்று, சஹான்ஷாபூரில் 1,800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ‘பசு ஆரோக்கிய மேளா’ என்ற கால்நடைகளுக்கான சுகாதார திட்டம் , ஏழை குடும்ப பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், அடுப்புகள் அளிக்கும் ஆவாஸ் யோஜனாதிட்டம் ஆகியவற்றை மோடி தொடங்கி வைத்தார்.
இசாத்கர்
மேலும், கழிவறை கட்டுவதற்கான அடிக்கல்லும் பிரதமர் மோடி எடுத்து வைத்து, அந்த கழிவறைக்கு ‘இசாத்கர்’ என்று பெயரிட்டார். இசாத்கர் என்றால் வீடுகளில் உள்ள பெண்களுக்கு கழிவறை கட்டிக்கொடுத்து மரியாதை செய்தல் என்று பொருள்
அதன்பின், அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது-
வளர்ச்சிதான், வாக்கு அல்ல
கருப்பு பணத்துக்கும், ஊழலுக்கும் எதிராக என்னுடைய அரசு போரை முன்னெடுத்துள்ளது. நேர்மையற்றவர்கள் கொள்ளையடித்ததன் காரணமாக, ஏழை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பா.ஜனதா கட்சியைப் பொருத்தவரை தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் செய்யவில்லை. எங்களின் கலாச்சாரம் வேறுபட்டது. அரசியலில், கட்சிகள் வாக்குகளை குறிவைத்து செயல்படுகிறார்கள். நாங்கள் நாட்டின் வளர்ச்சி மட்டுமே முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறோம். வாக்குகளுக்கு அல்ல.
பால் உற்பத்தி
இங்குள்ள கால்நடைகள் வாக்களிக்கப் போவதில்லை. எந்த அரசியல் கட்சியின் வாக்காளர்களும் அல்ல. எங்களின் இந்த நடவடிக்கை மூலம், கால்நடைகளுக்கு முறையான உடல்நல சிகிச்சை கிடைக்கும். பல நாடுகளைக் காட்டிலும் பால் உற்பத்தியில் பின்தங்கி இருக்கும் நாம், இந்த நடவடிக்கை மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
வருவாய் அதிகரிக்கும்
கால்நடை வளர்ப்பும், பால்பண்ணை தொழிலும் வருவாயை அதிகப்படுத்த விவசாயிகளுக்கு மற்றொரு வழியாகும். இது வளர்ச்சி பாதைக்கு புதிய நடவடிக்கையாக அமையும். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டின் வருவாயும் அதிகரிக்கும்.
ஏழைமக்களுக்கு வீடு
நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீடு இல்லாமல் இருக்கிறார்கள். நகர்புறம், கிராமப்புறங்களில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு 75-வது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடும் 2022ம் ஆண்டுக்குள் சொந்தவீடு கட்டித் தரப்படும். இந்த கடினமான பணியை மோடி செய்யாமல் வேறு யார் செய்வது?
நாடு முழுவதும் கோடிக்கணக்கான வீடுகள் கட்டப்படும் போது, செங்கல், சிமென்ட், இரும்பு கம்பி, மரம் போன்றவைகளுக்கு தேவை அதிகரிக்கும். அப்போது, ஆயிரக்கணக்கான மக்களுக்கு புதிய வழிகள் மூலம் வேலைவாய்ப்பும், வருவாயும் கிடைக்கும்.
குற்றச்சாட்டு
இதற்கு முன் மாநிலத்தில் ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசு, வீடு இல்லாத ஏழை மக்களின் பட்டியல் குறித்து மத்திய அரசுக்கு அளிக்கவில்லை. ஏழை மக்களுக்கு சொந்த வீடு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் முந்தைய அரசுக்கு இல்லை.
மத்திய அரசின் நெருக்கடி அளித்த பின், 10 ஆயிரம் பேரின் பட்டியலை அளித்தது. ஆனால், இப்போது முதல்வர் யோகி தலைமையிலான அரசு வந்தபின், லட்சக்கணக்கான மக்களின் பெயர் பட்டியல் எங்களுக்கு கிடைத்துள்ளது.
பெண்களுக்கு மரியாதை
வீடுகளில் கழிவறை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்தை சேமிக்க முடியும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. ‘இசாத்கர்’ என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும். வீடுகளில் உள்ள அம்மாக்களுக்கும், சகோதரிகளுக்கும் கழிவறை கட்டிக்கொடுத்து மரியாதை செய்வதாகும். அடுத்து வரும் காலங்களில் இதுபோல் அதிகமான கழிவறைகள் கட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.