
பாகிஸ்தானில் 7வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் தனது 2வயது மகளுடன், டி.வி.யில்தோன்றி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
7-வயது சிறுமி
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள கசூர் நகரில் கடந்த 4ந் தேதி ஜைனப் அன்சாரி என்ற 7வயது சிறுமி ஒருவர் புனித குர்ஆன் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புகையில் மர்மநபரால் கடத்தப்பட்டார்.
பிணமாக மீட்பு
அதன்பின் கடந்த 9-ந்தேதி அந்த சிறுமி உடலில் பலத்த காயங்களுடன், குப்பை கிடங்கில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் பெற்றோர், புனித ஹஜ் பயணத்துக்கு சென்று இருந்த நேரத்தில் இந்த துயர சம்பவம் நடந்தது.
கலவரம், போராட்டம்
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த மக்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை அடக்க போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
எதிர்ப்பு
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சமா’ சேனலில் பணியாற்றும் பெண் செய்திவாசிப்பாளர் வித்தியாசமானமுறையில் இந்த சம்பவத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
மகளுடன் தோன்றினார்
சமா சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் கிரண் நஸ் என்பவர் தனது 2 வயது மகளுடன் சேனலில்தோன்றி தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது-
வலிமையானது
இன்று நான் உங்கள் முன் செய்திவாசிப்பாளர் கிரண் நஸ் ஆக வரவில்லை. 2 வயது குழந்தைக்கு தாயாக, என் மகளுடன் இங்கு வந்து அமர்ந்து இருக்கிறேன். பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட அந்த 7 வயது சிறுமியின் சிறிய சவப்பெட்டி மிக வலிமையானதாக மாறிவிட்டது. அந்த சவப்பெட்டிக்கு முன் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் புதைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மையாகும்.
அதிர்வலை
7வயது சிறுமி ஜைனப் அன்சாரி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிகழ்வு நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த குழந்தையின் நலனுக்காக அவரின் பெற்றோர் ஹஜ் புனிதப் பயணம் இறைவனிடம் தொழுகை நடத்துகிறார்கள்.
சமூகத்தின் கொலை
பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய அரக்கனால் அந்த சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள். இது ஒரு சாராண குழந்தையை கொன்றுவிட்டதாக கருதமுடியாது. ஒட்டுமொத்த சமூகத்தையே கொலை செய்ததாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.