பள்ளி, சாலைகளுக்கு ஒலிம்பிக் பதக்க நாயகர்களின் பெயர்களை சூட்ட முடிவு... அதிரடியாக முடிவெடுத்த முதல்வர்.!

By Asianet TamilFirst Published Aug 7, 2021, 9:48 PM IST
Highlights

பஞ்சாப்பில் உள்ள சாலை, பள்ளிகளுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களின் பெயர்களைச் சூட்ட அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியி்ல் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 1980-இல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்ற பிறகு, இப்போதுதான் பதக்கம் வென்று புதிய சகாப்தம் படைத்தது. இந்நிலையில் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களை கவுரவிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 
இதுகுறித்து பஞ்சாப் அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், “41 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்த வீரர்கள் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் முயற்சியைப் பாராட்டும் விதமாக வீரர்களின் பெயர்களை சாலை, பள்ளிகளுக்குச் சூட்ட உள்ளோம். இதற்கான ஒப்புதலை முதல்வர் அமரிந்தர் சிங் வழங்கியுள்ளார். விரைவில் இதற்கான உத்தரவு வெளியிடப்படும். 
பதக்கம் பெற்ற வீரர்களின் குடியிருப்புப் பகுதியை இணைக்கும் சாலைகளுக்கும், அருகில் உள்ள பள்ளிகளுக்கும் அவர்களுடைய பெயர்கள் சூட்டப்படும். இது வருங்காலத் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும். ஒருகாலத்தில் இந்திய விளையாட்டுத் துறையில் பஞ்சாப்பின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது. இந்த ஒலிம்பிக்கில் பஞ்சாப் சார்பில் 20 வீரர்கள் சென்றனர். ஆண்கள் ஹாக்கி அணியில் 11 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்தார்.
 

click me!