மக்களே அசால்ட்டா இருக்காதீங்க.. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையே முடியல.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.!

By Asianet Tamil  |  First Published Aug 3, 2021, 9:48 PM IST

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் இன்னும் ஓயவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 


இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி தினசரி பாதிப்பு 30 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் தளர்வுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகமாக மக்கள் நெருக்கம் உள்ளது. ஆனால், அதேவேளையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் சற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனால், மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலகம் முழுவதுமே அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் இன்னும் ஓயவில்லை.  ஜூன் 1 அன்று 279 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு  பதிவாகியிருந்தது.  தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கை 57 என்ற அளவில் உள்ளது. 
கேரளாவில் 10 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 47.5 சதவீதம் பாதிப்புகள் பதிவாகின்றன.  இந்தியா முழுவதும் 44 மாவட்டங்களில்  பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் மேலே உள்ளது. கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில்தான் இந்தப் பாதிப்பு அதிகமாக உள்ளன” என்று லாவ் அகர்வால் தெரிவித்தார். 

Latest Videos

click me!