
தீபாவளிக்கு பட்டாசு விற்க அனுமதி கோரி டெல்லியில் பட்டாசு விற்பனையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், உலகின் அதிக மாசு கொண்ட மிகப்பெரிய நகரமாக திகழும் டெல்லியில், உள்ள மக்கள் நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக நச்சுத்தன்மையை கொண்ட காற்றை சுவாசித்து வருவதாகவும், உலகின் 10 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி 9-வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் டெல்லியில் காற்று மற்றும் ஒலி மாசு பல மடங்கு அதிகரித்ததாகவும், அதனால் டெல்லியில் பட்டாசு வெடிக்கவும் விற்கவும் தடைவிதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாவளிக்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் டெல்லியில் பட்டாசு விற்க தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து சதன்பஜார் பகுதியில் பட்டாசு விற்பனையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து, தீபாவளிக்கு பட்டாசு விற்க அனுமதி கோரி டெல்லியில் பட்டாசு விற்பணையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
அதில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பெரியளவில் இழப்பு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது.