
காயமடைந்த கன்றுக்குட்டி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால், தாய்ப்பசு ஓடி வந்த காட்சி, இணையதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி இரண்டு மாத கன்றுக்குட்டி ஒன்றுக்கு காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளது. இதைப் பார்த்த தாய் பசு கூச்சல் எழுப்பி வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
பசுவின் சத்தத்தைக் கேட்ட அதன் உரிமையாளர்கள், கன்றுக்குட்டியை குட்டி யானை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கன்றுக்குட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதை அறிந்த தாய்ப்பசு, வாகனத்தின் பின்னால் கண்ணீருடனே ஓடிவந்தது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மருத்துவமனை வரை தாய்ப்பசு ஓடி வந்தது.
இந்த காட்சியை சாலையில் சென்றவர்கள் நெகிழ்ந்து போயினர். மேலும், அவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்றுக்குட்டி, நேற்று முன்தினம் அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தாய்ப்பசு இரண்டு நாட்களுக்கு மேல், மருத்துவமனை வாசலிலேயே நின்று கொண்டிருந்ததாம்!