
திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள் கொண்ட பை ஒன்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். வேறு எங்கேனும் வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மலைமீதுள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல, இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று அலிபிரி மலைப்பாதை. மற்றொன்று ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை. இந்த வழிகளில் பக்தர்கள் நடைபயணமாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக இங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்து வருகின்றனர். பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், கோயிலைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் விமானங்கள் பறக்கவும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. செம்மரக் கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலையடிவாரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பை இருப்பதை பார்த்துள்ளனர். அதில் ஸ்ரீரங்கம் முகவரி இருந்துள்ளது.
அந்த பையை போலீசார் சோதனையிட்டபோது, வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும், எலக்ட்ரானிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டுமல்லாது கேரளாவைச் சேர்ந்த நகைக்கடைக்கு சொந்தமான நகைப் பெட்டி ஒன்றும் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தீவிரவாதிகளின் சதி செயலா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடடத்தி வருகின்றனர். மேலும், மலைப்பாதையில் வேறு எங்கும் வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.