
காதலனுடன் சென்ற மணமகளின் தங்கையுடன் திருமணம் வேண்டாம் என்று மணமகனும் ஓடிச் சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூருவை அடுத்த மாலூர் பகுதியில் உள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் குரேஷ் என்பவருக்கும், ரம்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமண நடக்க திட்டமிடப்பட்டிருந்தது.
திருமணத்தையொட்டி, மணமகன் வீட்டார் சனிக்கிழமை மாலை 5 மணியளவுக்கு மண்டபத்துக்கு வந்தனர். ஆனால், இரவு 7 மணி நேரம் ஆகியும் பெண் வீட்டார் வராததால், அவர்களுக்கு மணமகன் வீட்டார் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், பெண்வீட்டாரின் தொலைபேசி எண் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார், மணமகள் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.
வீட்டுக்கு சென்று விசாரித்த மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மணமகள் தன் காதலனுடன் முன்தினம் இரவு வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது. இதனை அடுத்து ரம்யாவின் சகோதரியை, குரேஷூக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வந்தன.
கொடுத்த வாக்கை காப்பாற்றிய சந்தோஷத்தில் மணமகள் வீட்டாரும், தன் மகனுக்கு திருமணம் நடைபெறுகிற சந்தோஷத்தில் மணமகன் வீட்டாரும் இருந்து வந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கி வரும் நிலையில், திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டன.
மணமேடைக்கு, மணமகனை அழைத்து வர புரோகிதர் கூறினார். இதையடுத்து, மணமகனை அழைத்து வர உறவினர்கள் சென்றனர். மணமகன் அறையில் குரேஷைக் காணாதது கண்டு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அதிர்ந்து போயினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.