
சமானிய மக்களை கருத்தில் கொள்ளாமல், பெட்ரோல், டீசல் மீது மிகவும் ஏதேச்ச அதிகாரத்துடன் உற்பத்தி வரி உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் வரும் 20ந் தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
உற்பத்தி வரி உயர்வு
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படாமல், மக்களுக்கு அதன் பலனைச் சென்று அடையவிடாமல், உற்பத்தி வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் அஜய் மக்கான் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
வௌ்ளை அறிக்கை
100 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கினால், அதில் ரூ.51.78 காசுகள் வரியாகச் செல்கிறது, டீசலில்ரூ.44.40 காசுகள் வரியாகச் செல்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரி விதிக்கப்படுவது குறித்து மத்திய அரசு வௌ்ளை அறிக்கை வௌியிட வேண்டும்.
வரியைக் குறைக்க காங்கிரஸ் கட்சி அனைத்து வகையிலும், மிகவும் தீவிரமாகப் போராடும். இந்த கொடுமையான வரி முறை திரும்பப் ெபறும் வரை, மக்களுக்காக காங்கிரஸ் கட்சி மிகுந்த உணர்ச்சியுடன், தீவிரமாக போராடும்.
மக்களிடம் கொள்ளை
சமானியமக்களின் பாக்கெட்டை ஓட்டையிட்டதே பாஜனதா அரசின் அடையாளமாக இருந்து வருகிறது. பா.ஜனதா அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தி சமானியமக்களிடமிருந்து கொள்ளையடித்து வருகிறது, லாபம் ஈட்டுவதே அரசின் முக்கிய குறிக்கோளாக இருந்து வருகிறது. பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், டீசல், பெட்ரோல் விலை விண்ணை முட்டுகிறது.
அர்ப்ப காரணம்
இந்த திடீர் விலை உயர்வுக்கு அமெரிக்காவில் வீசிய ஹார்வி, இர்மா சூறாவளிதான் காரணம் என்று அர்ப்பத்தனமாக மோடி அரசு காரணம் கற்பிக்கிறது. கடந்த 3.5 ஆண்டுகளாக உற்பத்தி வரியை 11 முறை உயர்த்தி, சாமானிய மக்களின் சேமிப்பை அரசு கொள்ளை அடித்து வருகிறது.
133, 400 சதவீதம்
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 133.47 சதவீதமும், டீசல் மீதான உற்பத்தி வரி 400.86 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்தபின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 52 சதவீதம் சரிந்தபின்னும், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல் மீதானாஒட்டுமொத்த பங்களிப்பு மத்திய, மாநில அரசுகள் சார்பில் கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.5.24 லட்சம் கோடியாகும்.
போராட்டம்
இந்த வரி உயர்வை எதிர்த்து வரும் 20-ந் தேதி முதல் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. முதலில் டெல்லியில் இருந்து போராட்டம் தொடங்கும். 17-ந்தேதிமுதல் 20-ந்தேதி வரை அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் கையெழுத்து போராட்டமும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.