
நாள்தோறும் விலை மாற்றம் கொண்டு வந்ததில் இருந்து, பெட்ரோல், டீசல் விலை 7 ரூபாய் அதிகரித்து, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.79.54 காசுகளாகவும், டீசல் ரூ.62.76 காசுகளாகவும் அதிகரித்து இருக்கிறது.
நாங்கள் பொறுப்பல்ல
இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நிருபர்கள் நேற்று முன் தினம் கேட்டபோது, “ பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தில் அரசு தலையிடுவதில்லை, அதை அரசு எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அதே சமயம், உற்பத்தி வரியை நிர்ணயம் செய்வது நிதி அமைச்சகத்துக்கு உட்பட்டது’’ என்று தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
ஆனால், உண்மையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக வீழ்ச்சி அடைந்தநிலையிலும், பெட்ரோல் , டீசல் விலைய மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது.சமானிய மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி அரசு அனுகுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
கச்சா எண்ணெய் அப்போது, இப்போது எப்படி?
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பதற்கு 2 மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை என்ன எனத் தெரியுமா?. அதாவது 2014ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 108.6 டாலர். அப்போது டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.73.16 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் விலை படுவீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் கடந்த 11ந் தேதி நிலவரப்படி 54.2 டாலருக்கு விற்கப்படுகிறது.
மாற்றம் குறைவு
இப்போது டெல்லியில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா?. லிட்டர் ஒன்று ரூ.70.30காசுகளுக்குவிற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏறக்குறைய பாதி அளவு குறைந்த பின்பும்பெட்ரோல் விலையில் மிகச்சிறிய அளவே குறைந்துள்ளது. 42 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையிலேயே நீடிக்கிறது.
ஏன் உயர்வு?
மேலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை ஒப்பிட்டாலும் 2014ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதிடாலருக்கு எதிராக ரூ.61.76 காசுகளாக இந்திய ரூபாய் இருந்தது. ஆனால், கடந்த மாதம் 11ந்தேதிநிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது சரிந்து ரூ.63.90 காசுகளாக இருந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பிலும் மிகப்பெரிய அளவு மாற்றம் இல்லாத நிலையில் ஏன் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.
உற்பத்தி வரி விதிப்ு
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. இருந்தபோதிலும், உற்பத்தி வரியை 2015ம் ஆண்டிலும், 2016ம் ஆண்டிலும் தொடர்ந்து உயர்த்தி வந்ததால், கச்சா எண்ணெய் விலை சரிவின் பலன் மக்களுக்கு உரிய வகையில் சென்று சேரவில்லை. மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க இந்த உற்பத்தி வரி உயர்வு அதற்கு மிகவும் உதவியது.
உண்மையில் விலை என்ன?
உண்மையில் பெட்ரோல் விலை என்ன? என்பது குறித்து இந்தியன் ஆயில் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோலை லிட்டர் ஒன்று ரூ.30.41க்கு டெல்லியில் டீலர்களுக்குவிற்கப்படுகிறது. இதில் உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.21.48 காசுகளும், டீலர்களுக்கு கமிஷனாகரூ.3.47 காசுகளும், வாட் வரியாக 27 சதவீதம் அல்லது ரூ.14.97 காசுகளும் விதிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக ரூ.70.43-க்கு விற்கப்படுகிறது. இதில் விலை உயர்வுக்கு பெரும்பகுதி காரணமாக இருப்பது உற்பத்தி வரியும், வாட் வரியும் ஆகும்.
அதுமட்டுமல்லாமல், கடந்த ஜூலை மாதம் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பின், விலை 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ஜூலை மாதம் பெட்ரோல் விலை ரூ.63.09 காசுகள் இருந்த நிலையில், கடந்த 14-ந்தேதி நிலவரப்படி ரூ.70.39 காசுகளாக உயர்ந்துவிட்டது.
ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால் விலை குறையுமா?
பெட்ரோலும், டீசலும் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரப்படும் போது, வாட், உற்பத்தி வரிகள் விதிக்கப்படாது. அவ்வாறு விதிக்கப்படாத பட்சத்தில் விலை கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.
அதாவது, டெல்லி நிலவரப்படி, பெட்ரோலுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டால், லிட்டர் ரூ.38 ஆகவும், 18 சதவீதம் விதிக்கப்பட்டால் ரூ.40 ஆகவும், அதிகபட்சமாக 28 சதவீதம் விதிக்கப்பட்டால் கூட ரூ.43.49 காசுகள் வரை மட்டுமே உயரும். மேலும் டீலர் கமிஷன், போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகளை கணக்கிட்டால் ரூ.55க்குள் அடங்கிவிடும் என்றுடீலர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து மும்பையில் பெட்ரோல் டீலர்கள் அமைப்பின் தலைவர் ரவி ஷிண்டே கூறுகையில், “ பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டிவரி விதிக்கப்பட்டால்,விலை கணிசமாக குறையும். அதை மத்திய, மாநில அரசுகள் விரும்புவதில்லை. ஆனால், நாங்கள் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதையே விரும்புகிறோம்’’ எனத் தெரிவித்தார்.