5,800 போலி நிறுவனங்களின் வங்கி கணக்கில் கோடி கணக்கில் கருப்பு பணம் -  மத்திய அரசு தகவல்

First Published Oct 6, 2017, 8:31 PM IST
Highlights
The Central Government has reported that the bank accounts of 5800 fake companies are black money.


ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு 5800 போலி நிறுவனங்களின் வங்கி கணக்கில் ரூ.4,574 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடைக்கு முன்பு போலி நிறுவனங்களின் பெரும்பான்மையான வங்கி கணக்குகளில் பேலன்ஸ் இல்லாமல் இருந்தது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருப்பு பணம்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக போலி நிறுவனங்களை களை எடுத்து வருகிறது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் போலி நிறுவனங்களாக கருதப்படுகிறது.

போலி நிறுவனங்களை கண்டுபிடித்து அதன் பதிவை மத்திய அரசு ரத்து செய்து வருகிறது. மேலும் போலி நிறுவனங்களின் இயக்குனர்களை தகுதி நீக்கவும் செய்து வருகிறது. இதுதவிர போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகளை செயல்படுத்த கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும் அந்த வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து தகவல் அளிக்கும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆய்வு

மொத்தம் 2 லட்சத்துக்குக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் வங்கி கணக்கு செயல்பாடுகள் மற்றும் ரூபாய் நோட்டு தடைக்கு பிறகான பரிவர்த்தனைகளை வங்கிகள் ஆய்வு செய்து வருகின்றன. இதில் 5800 போலி நிறுவனங்களின் வங்கி கணக்கு விவரங்களை முதல் கட்டமாக 13 வங்கிகள் வழங்கியுள்ளன. அதில் இந்த போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.4,574 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு தடைக்கு முன்பு பெரும்பாலான வங்கி கணக்குகளில் இருப்பு தொகை ஜீரோவாக இருந்தது. மேலும் டெபாசிட் செய்த தொகையில் ரூ.4,552 கோடியை அந்த நிறுவனங்கள் திரும்ப எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் தனது பெயரில் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை செயல்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

click me!