
தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. ஒருவர் ஸ்மார்ட் அட்டையில் அந்த நபரின் புகைப்படத்துக்குப் பதிலாக பிள்ளையார் படம் கூட வந்தது. இப்போது அதை பீகாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் செய்துகாட்டி, நாங்க ஒன்னும் சளைச்சவங்க இல்லை என்று தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ளது லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஜே.என். கல்லூரி. இங்கே பிகாம் பயின்று வருகிறார் கிருஷ்ண குமார் ராய் என்ற மாணவர். அவருக்கு அளிக்கப்பட்ட தேர்வுக் கூட அட்மிட் கார்டில், அவருடைய படத்துக்குப் பதிலாக விநாயகர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதை அந்த மாணவர் எல்லோரிடமும் தெரிவிக்க, இப்போது இந்த படம் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அக்டோபர் 9ம் தேதி தொடங்கவிருக்கும் தேர்வுக்குத்தான் இந்த நுழைவுச் சீட்டு அனுப்பப் பட்டுள்ளது. நுழைவுச் சீட்டை வாங்கிப் பார்த்த மாணவர் கிருஷ்ண குமார் ராய், அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், 'என் நுழைவுச் சீட்டை புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற போது, என் புகைப்படத்திற்கு பதிலாக விநாயகர் புகைப்படம் இருந்தது. புகைப்படத்தின் கீழே கணேஷ் என்று கையெழுத்தும் இடப்பட்டிருந்தது. ஆனால், நான் அப்ளிகேஷனை கொடுத்த போது, என் புகைப்படத்தை எல்லாம் சரியாக ஒட்டித்தான் கொடுத்தேன். ஹால்டிக்கெட் வாங்கிப்பார்த்த போது, என் முகவரிக்கு பதிலாக வேறு முகவரி இருந்தது. உடனே இதை பல்கலைக்கழகத்தில் கொடுத்து நிகழ்ந்திருகும் தவறு குறித்துக் கூறினேன்” என்றுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, பல்கலை நிர்வாகம் அந்த மாணவருக்கு உடனடியாக வேறு அட்மிட் கார்ட் கொடுத்துவிடுவோம் என்று கூறியுள்ளது.