
ஆந்திராவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், 5 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அந்த எம்.எல்.ஏக்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அந்த 5 பேரில் ஒருவர் தான் தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியுமா? சபாநாயகரின் அதிகார வரம்பு, நீதிமன்றத்துக்கு உட்பட்டதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சபாநாயகரின் அதிகார வரம்பு, சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியுமா? சபாநாயகர் நீதிமன்ற உத்தரவின் வரம்பிற்குட்பட்டவரா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஆந்திர எம்.எல்.ஏவும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் உத்தரவு, தமிழக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.