
ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1ந்தேதி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், லட்சக்கணக்கில் செலவு செய்து மலர் அலங்காரம் செய்யவும், சிறப்பு தரிசனத்தக்கு ஏற்பாடு செய்யவும் கூடாது என ஆந்திர அரசு திடீர் தடை உத்தரவு போட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆந்திர அரசு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், இந்துக்களின், தெலுங்கு மொழி பேசும் மக்களின் புத்தாண்டு என்பது யுகாதி மட்டுமே. ஆங்கிலப் புத்தாண்டு கிடையாது. ஆதலால், ஆங்கிலப்புத்தாண்டு அன்று கோயில்களில் சிறப்பு தரிசனம் நடத்தவும், லட்சக்கணக்கில் நன்கொடை பெற்று மலர்அலங்காரம் செய்யவும், சிறப்பு பூஜைகள் நடத்தவும் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதற்கு முற்போக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள திராவிட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் கே.எஸ். சலாம் கூறுகையில், “ புத்தாண்டை கொண்டாடுவதும், வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் தனிமனிதர்களின் விருப்பம். ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது இந்துக்களின் வழக்கத்துக்கு எதிரானது எப்படி கூற முடியும்?.
இந்துக்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாக ஆந்திர அரசு செயல்படுகிறதா?. ஜனவரி 1ந்தேதி இந்துக்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளதா?. ஆந்திர அரசின் முடிவுக்கு இந்துத்துவா சக்திகள் பின்புலத்தில் இருக்கிறத, இதை கலாச்சார பேரினவாதம் எனலாம்’’ என்றார்.
இதை கருத்தை வலியுறுத்தி வரலாற்று பேராசிரியர் அதப்பா சத்திரநாராயணா கூறுகையில், “ ஆங்கிலக் காலண்டர் முறையை கிறிஸ்துவர்கள்தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி, சமூகத்தில் உள்ள மக்களிடையே பிளவை உண்டாக்க அரசு முயற்சித்துள்ளது.
இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. பாகிஸ்தானைப் போல் முஸ்லிம் நாடு அல்ல. அங்குதான் மக்கள் குறிப்பிட்ட மதப் பாரம்பரியங்களையும், பழங்கங்களை கடைபிடிக்க வேண்டும் , தவறினால் தண்டனை வழங்குவார்கள்.
இந்திய கலாச்சாரம் என்பது, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள உள்ளிட்ட பல்வேறு மதங்களின் பாரம்பரிய பழங்கங்களை உள்ளடக்கியது. பிப்ரவரி 14-ந்தேதியை யாரும் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என்று கூற முடியுமா? இது கூட இந்து மதத்தின் பழக்கம் கிடையாதுதான்’’ என்று தெரிவித்தார்.
ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ரமா மெல்கோட் கூறுகையில், “ ஜனவரி1-ந்தேதி கோயிலுக்கு மக்கள் சென்று வழிபட்டால், ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிடுமா?. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க என்ன அவசியம் இருக்கிறது?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆந்திரா மாநில மக்கள் மட்டுமல்லாமல், தெலங்கானா மக்களும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.