
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தால், 50 வயது மூதாட்டிக்கு ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் பசியால் வாடிய அந்த மூதாட்டி பட்டினியால் உயிரிழந்தார்.
ரேபரேலி நகரைச் சேர்ந்தவர் சகினா ஆசிபா(வயது50). இவரின் கணவர் முகமது இஸ்காக். சகினா பெயரிலையே ரேஷன் கார்டு உள்ளது. ஆனால், சகினாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு வீட்டில் நடமாட முடியாத நிலையில் உள்ளார்.
இந்நிலையில், சகினாவின் கணவர் முகமது ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் கேட்டபோது, ரேஷன் கார்டில் ஆதார் அட்டையை இணைக்கவில்லை, சகினாவின் கை ரேகை இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கமுடியும் எனக் கூறி தரமறுத்துவிட்டார். இதனால், இம்மாதம் முழுவதும் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் சகினா குடும்பத்தினர் திணறியுள்ளார்.
கடந்த 5 நாட்களாக உணவின்றி பசியால் வாடிய சகினா, நேற்று முன்தினம் பட்டினியால் உயிரிழந்தார்.
இது குறித்து சகினாவின் கணவர் முகம்மது இஸ்காக் கூறுகையில், “ என் மனைவி சகினா பட்டினியால் உயிரிழந்தார். அவளை ரிக்சாவில் அழைத்துச் சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவேன். இந்த முறை உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த காரணத்தை கூறி ரேஷன்கடை ஊழியரிடம் பொருட்கள் கேட்டபோது, அவர் ஆதார் கார்டுக்காக கை ரேகை இல்லாமல் தரமுடியாது எனத் தெரிவித்துவிட்டார்’’ எனத் தெரிவித்தார்.
ஆதார் கார்டு இல்லாவிட்டாலும் ரேஷன்கடையில் வரும் மார்ச் மாதம் வரை பொருட்கள் தடையின்றி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது குறித்து விசாரணை நடத்த உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் சகினா உடல்நலக்குறைவால்தான் இறந்தார், பட்டினியால் இறக்கவில்லை எனத் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேபரேலி உள்ளூர் நிர்வாகம் கூறுகையில், “ நாங்கள் நடத்திய விசாரணையில் சகினாவின் வங்கிக்கணக்கில் ரூ. 4 ஆயிரம் வரை இருந்துள்ளது. ஏன் உணவுப்பொருட்கள் வழங்க மறுத்தார்கள் என சகினா குடும்பத்தாரிடம் கேட்டபோது விளக்கம் கூறவில்லை’’ எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அதிகாரி சீமாதிரிபாதி தெரிவித்துள்ளார்.