
பெண்களின் உடலமைப்பு குறித்து மிகவும் கொச்சையாக குறிப்பிட்டு இருந்து சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
சர்ச்சை வார்த்தைகள்
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு உடல்கல்வி பாடத்தில் பெண்ணின் உடலமைப்பு என்பது 36-24-36 என்ற ரீதியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை டாக்டர் வி.கே. சர்மா என்பவர் எழுதியிருந்தார். டெல்லியில் உள்ள நியூ சரஸ்வதி ஹவுஸ் நிறுவனம் புத்தகத்தை வௌியிட்டுஇருந்தது.
எதிர்ப்பு
இந்த புத்தகத்துக்கு பெற்றோர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, அந்த புத்தகத்தை திரும்பப் பெறுவதாகவும், அந்த புத்தக்கத்தை இனி விற்பனை செய்யப்போவதில்லை, திருத்தப்போகிறோம் என்று நியூ சரஸ்வதி ஹவுஸ் நிறுவனம் தெரிவித்தது.
பள்ளிகள்தான் பொறுப்பு
சி.பி.எஸ்.இ. வாரியம் இது குறித்து கூறுகையில், “ நாங்கள் இதுபோன்ற புத்தகங்களை பரிந்துரை செய்யவில்லை. சாதி, சமூகம், மதம், பாலினம் பற்றி புண்படுத்தும் விதமாக எந்த கருத்தும் பாடப்புத்தகத்தில் இடம்பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே இதுபோன்ற புத்தகங்களை பாடத் திட்டத்தில் சேர்க்கும்போது, பள்ளிகள் தான் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தை...
இந்நிலையில் ெடல்லியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்கூறுகையில், “ பெண்கள் குறித்து கவர்ச்சியாக குறிப்பிடப்பட்டு இருந்த அந்த புத்தகத்தையும், அதை வெளியிட்ட நிறுவனத்தையும் கண்டிக்கிறேன். அது போன்ற வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்து இருக்கிறேன். இது என்.சி.இ.ஆர்.டி. புத்தகம் இல்லை, தனியார் சிலர் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ.பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களையே வாங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.’’ என்று தெரிவித்தார்.