
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகள் நேரில் ஆஜராகும்படி கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கர்ணன் இருந்த போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து அதற்கு தடை விதித்தார் கர்ணன். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இவ்விவகாரம் உச்சநீதிமன்றம் போனதை அடுத்து கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
அவமதிப்பு வழக்கில் ஆஜராகும்படி உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் இரண்டு முறையும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றத்துக்கு எதிராக சி.பி.ஐ.விசாரணைக்கு கர்ணன் தன்னிச்சையாக உத்தரவிட்டார்.
மேலும் எந்தவொரு நீதிமன்றமும் சட்டநடைமுறையை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்குரிய சட்டப்பிரிவுகளின் கீழ், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் உள்பட 7 நீதிபதிகள் வரும் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி சர்ச்சை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் 7 நீதிபதிகளும் 15 நாட்களுக்குள் தங்களது பாஸ்போர்ட்டுகளை டெல்லி டிஜிபி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கர்ணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.