GST வரிக்குள் வருகிறது விவசாயம் - 18 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட வாய்ப்பு?

First Published Apr 13, 2017, 5:03 PM IST
Highlights
18 percent tax for agriculture in GST bill


சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும் போது, சேவை வரி தற்போது வசூலிக்கப்படும் 15 சதவீதத்தில் இருந்து, அதிகரித்து, 18 சதவீதமாக உயரும். சில சேவைகளுக்கு அதிகமான பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

சேவை வரி

தற்போது நாடுமுழுவதும் சேவை வரி 14 சதவீதமும், ஸ்வாச் பாரத் செஸ் மற்றும் கிரிஷி கல்யான் செஸ் ஆகிய இருவரிகளுடன் சேர்த்து 15 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 60 விதமான சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக மருத்துவம், கல்வி, விவசாயம் ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.

விலக்கு

இதில் தோட்டக்கலை, பூக்கள் விவசாயம், மாட்டுப்பண்ணை, பட்டுப்புழு வளர்த்தல் ஆகியவற்றில் வெளிநபர்களை வைத்து அதிக அளவில் விவசாயம் செய்து வந்தபோதிலும், சேவை வரியில் இருந்து விலக்கு தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரியில் இது சேவை வரிக்குள் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.

விவசாயத்துக்கும் வரி

ஜி.எஸ்.டி. சட்டத்தில்,  சுயமாகவோ, அல்லது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டோ விவசாயம் செய்து, ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக விற்றுமுதல் இருந்தால் அது ஜி.எஸ்.டி வரிக்குள் வராது. அதேசமயம், வெளிநபர்களை சம்பளத்துக்கு வைத்து, விவசாயம் செய்து, விற்றுமுதல் ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், அது ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரப்படும்.அ்ப்போது சேவை வரியா 18 சதவீதம் விதிக்கப்படலாம்.  

18 சதவீதம்

இது குறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் போது, சேவை வரி தற்போது இருக்கும் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயரும். தற்போது விலக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கு தொடர்ந்து விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

பரிந்துரை

இப்போது சேவை வரி விலக்கில் இருக்கும் பிரிவுகளுக்கு தொடர்ந்து விலக்கு அளிக்க முயற்சி எடுக்கப்படும். இதற்கான பரிந்துரைகளை நாங்கள் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அளிப்போம், அதை ஏற்றுக்கொள்ளவும், மறுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

வரிவிதிப்பு இருக்கும்

விவசாயத்தை பெரிய அளவில் செய்பவர்கள் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரப்படுவார்கள். ஆனால், என்னென்ன பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிக்குள் வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே மே மாதம் 18,19-ந்தேதி ஸ்ரீநகரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் மீண்டும் கூடி, வரிவீதங்கள் குறித்து முடிவு செய்ய இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

click me!