
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பேருந்து ஒன்றில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பக்தர்களில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.
அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தரிசித்து வருகின்றனர். ஜூன் 29-ம் தேதி தொடங் கிய இந்த அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் முடி வடைகிறது.
இந்த நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியின் முதலாண்டு நினைவு தினம் கடந்த 8 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அமர்நாத் யாத்திரை அன்று மட்டும் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் யாத்திரை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டம் அருகே பஸ்ஸில் பயணித்துக் கொண்டு இருந்த அமர்நாத் யாத்திரிகர்கள் மீது ஆயுதங்கள் தாங்கிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள் பலியாயினர். 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தனக்கு விவரிக்க முடியாத வருத்தமளிக்கிறது என்றும் இந்தியா, யாருக்கும் அடிபணியாது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.