
வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெற்று செயல்பட்டு வரும் 6 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள், தங்களின் 5 ஆண்டுகள் வரவு செலவுக்க கணக்கை வரும் 23-ந்தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும், கடும் நடவடிக்கையையும் எதிர்கொள்ள நேரிடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த 8-ந் தேதியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், வரும் 23-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், வெளிநாடு நன்கொடை ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் இருந்து பெறும் நன்கொடைகளை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்.
ஆனால், தொண்டு நிறுவனங்கள் கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டுவரை தங்களின் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக கடந்த மே மாதம் 18 ஆயிரத்து 523 தொண்டு நிறுவனங்களுக்கு மத்தியஅரசு நோட்டீஸ் அனுப்பி வரவு செலவு கணக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்தது. ஜூன் 14-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து, மின்அஞ்சல் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று புதிதாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது- போதுமான நோட்டீஸ், மற்றும் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு இருந்தும் கூட, 5 ஆயிரத்து 922 தொண்டு நிறுவனங்கள் இன்னும் தங்களின் ஆண்டு வரவு செலவு கணக்கை கடந்த 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் கடந்த 8ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 23-ந்தேதிக்குள் அந்த தொண்டு நிறுவனங்கள் தங்களின் ஆண்டு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், உள்துறை அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.