
மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள்…இந்திய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல்…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
காஷ்மீரில் கடந்த ஆண்டு உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்துத் தாக்கி அழித்தது.
இதனையடுத்து கொஞ்ச நாட்கள் வாலை சுருட்டி வைத்திருந்த தீவிரவாதிகள் தற்போது மீண்டும் தங்களது வேலையை காட்டத் தொடங்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகில் உள்ள பன்ஞ்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது, தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் துப்பாக்கிசண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஒரு மேஜர் உட்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிசண்டை நடந்து வருகிறது.