பெங்களூருவில் தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதுடன், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பெங்களூருவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலுக்கான சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவதாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு மற்றும் பெங்களூரு காவல்துறையின் உளவுத்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக, பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் ஐந்து பேரில் மூன்று பேர் சுஹைல், உமர், தப்ரேஸ், முதாசிர் மற்றும் பைசல் ரப்பானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கான சதித்திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜுனைத் என்பவர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்கள் உள்ளிட்ட அவர்களது உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகின் வலிமையான பாஸ்போர்ட் சிங்கப்பூர்: இந்தியாவுக்கு எந்த இடம்?
கைது செய்யப்பட்ட நபர்கள் பெங்களூரில் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. ஜுனைத் என்பவர் அவர்களுக்கு தலைவராக செயல்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும், குஜராத் எல்லை அல்லது பஞ்சாப் எல்லை வழியாக வெடிபொருட்களை வாங்குவதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் ஜுனைத் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 பேரும் 2017ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்தபோது பயங்கரவாதிகளுடன் அவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், நான்கு வாக்கி-டாக்கிகள், ஏழு கைத்துப்பாக்கிகள் மற்றும் பிற வெடிமருந்துகளை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.