மக்களவை சபாநாயகர் பதவியில் ஆர்வமில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் எந்த கட்சியும் வெற்ற பெறாததால் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி துணையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. 2014, 2019-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டிலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராகி உள்ளார்.
இந்த முறை பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மற்றும் ஜனதா தளம் (ஐக்கிய) போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது.
இந்த நிலையில் 18வது மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஜூலை 3ஆம் தேதி நிறைவடைகிறது. நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான தொடக்க அமர்வைக் குறிக்கும் வகையில், ஜூன் 26ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
நாளை புதிய மக்களவை சபாநாயகரின் பெயரை பிரதமர் மோடி முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் புதிய மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடைமுறை பின்பற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய குறி வைத்துள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இதற்காக அக்கட்சிகள் பாஜகவுடன் நிபந்தனைகளை விதிப்பதாகவும் கூறப்பட்டது. எனினும் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கடந்த வாரம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் பதவியை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாகவும் அதனை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இதுகுறித்து பேசி உள்ளார். தெலுங்கு தேசம் நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் “ சபாநாயகர் தேர்தல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்தது. தெலுங்கு தேசம் கட்சிக்கு அது தேவையில்லை என்றேன். அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன். மாநிலம் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. உதவி கேட்டேன். ஆந்திர மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியை கொடுத்தனர்.
பதவி கேட்டால் மாநில நலன் பாதிக்கப்படும். எங்களுக்கு மாநில நலன் முக்கியம். ஒவ்வொரு எம்.பி.க்கும் மூன்று துறைகள் ஒதுக்குவேன். அந்தந்த துறைகளில் உள்ள நிதி மற்றும் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும். லோக்சபாவில் 16 எம்.பி.க்கள் பலம் உள்ளதால், மாநிலத்தின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர்களுடன், எம்.பி.,க்கள் பேசி, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எம்.பி.க்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.