பெற்றோரை கைவிட்டால் இனி ஆப்புதான்.! சம்பளத்தில் கை வைக்கும் அரசு.!

Published : Mar 30, 2026, 12:42 PM IST
Elderly Parents

சுருக்கம்

Telangana Assembly: தெலங்கானா அரசு, வயதான பெற்றோரை கவனிக்கத் தவறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ரூ.10,000 பிடித்தம் செய்ய ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 

வயதான பெற்றோரின் நலனையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் தெலங்கானா அரசு ஒரு முக்கிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதாவது பெற்றோரை கவனிக்கத் தவறும் ஊழியர்களிடமிருந்து ரூ.10,000 சம்பளம் பிடித்தம் செய்யப்படும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்த சட்டம், ஊழியர்கள் தங்கள் பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமைகளை தெளிவாக வரையறுக்கிறது. பெற்றோருக்கான மருத்துவம், வசிப்பிடம், நிதிப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளை பிள்ளைகள் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை பிள்ளைகள் பெற்றோரை புறக்கணித்தால், அதிகாரிகள் தலையிட்டு சட்டத்தை அமல்படுத்தவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, தங்கள் பிள்ளைகளிடமிருந்து பராமரிப்பு தொகையை பெறும் உரிமையை இந்த சட்டம் பெற்றோருக்கு வழங்குகிறது. இதற்காக முறையான புகார் அமைப்பும் உருவாக்கப்படும்.

அமைச்சர் விளக்கம்

இது குறித்து பேசிய அமைச்சர் லக்ஷ்மன் குமார்: பெற்றோரை கவனிப்பது ஒவ்வொருவரின் தார்மீக கடமை. ஆனால், மாறிவரும் சமூக சூழலில், பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறைந்து வருகின்றன. எனவே, இந்த பொறுப்புகளுக்கு சட்டப்பூர்வ வலு சேர்ப்பது அவசியமாகிவிட்டது. முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார்.

சட்டம் எப்படி செயல்படுத்தப்படும்?

இந்த சட்டத்தை திறம்பட செயல்படுத்த ஒரு பிரத்யேக கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதிசெய்ய, புகார்களைப் பெற்று விசாரிப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூகப் பொறுப்புக்கு ஒரு புதிய அளவுகோல்

குடும்பங்களில் முதியோர் புறக்கணிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சட்டம் சமூகத்தில் ஒரு பொறுப்புணர்வை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு தார்மீக மற்றும் சட்டரீதியான அளவுகோலாக அமையும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது பெருமைக்குரிய விஷயம் என்று கூறிய அமைச்சர் லக்ஷ்மன் குமார், முதியவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்றார். இந்த சட்டம் தெலங்கானாவில் குடும்ப கட்டமைப்புகளை வலுப்படுத்தி, மூத்த குடிமக்கள் மரியாதையுடன் வாழ வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Hike: விண்ணை முட்டும் தங்கம் விலை.! இறக்குமதி வரி 15% உயர்வு! இனி தங்கம் வாங்க முடியுமா?
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு