கள் விற்பனைக்கு அனுமதி! பீகாரில் வாக்குறுதிகளை அள்ளி விடும் தேஜஸ்வி யாதவ்!

Published : Oct 28, 2025, 05:18 PM IST
Tejashwi Yadav

சுருக்கம்

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகாரில் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்குச் சட்டத்தில் இருந்து கள்ளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

பீகாரில் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் மதுவிலக்குச் சட்டத்தில் இருந்து கள்ளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

சாரண் மாவட்டத்தில் உள்ள பர்சாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது தேஜஸ்வி யாதவ் இந்த வாக்குறுதியை வழங்கினார். பீகார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கள்ளுக்கு ஏன் விலக்கு?

பீகாரில், முதல்வர் நிதிஷ் குமாரின் அரசாங்கம், மதுபானம் தயாரித்தல், விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றிற்கு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முழுமையாகத் தடை விதித்துள்ளது. மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைகள் குறித்து அடிக்கடி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பாரம்பரிய பானமான கள்ளின் மீதான தடையை நீக்குவதாக தேஜஸ்வி யாதவ் அளித்துள்ள இந்த வாக்குறுதி தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடும்.

ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டு

இந்தத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உள்ள தேஜஸ்வி யாதவ், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அவர் சாடினார்.

"சாரண் மாவட்டத்தில் தினமும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், முதல்வர் நிதிஷ் குமார் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற அவர் ஒருபோதும் வருவதில்லை. இது அரசாங்கத்தின் உணர்வற்ற தன்மையைக் காட்டுகிறது," என்று அவர் கூறினார்.

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால், சிறந்த காவல்துறை நிர்வாகம், மக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண்பது உறுதிசெய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்

'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கப்படும் என என்ற தேர்தல் வாக்குறுதியை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், "பீகார் மக்கள் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வால் சோர்வடைந்துள்ளனர். அவர்களுக்கு சுகாதாரம், வருமானம், தண்ணீர் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் அரசாங்கம் தேவை," என்று தெரிவித்தார்.

'இந்தியா' கூட்டணியின் தேர்தல் அறிக்கை மாற்றத்திற்கான ஒரு வரைபடமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!
இந்தியா நடுநிலையான நாடு அல்ல.. அமைதி தான் முக்கியம்.. புடினிடம் உறுதியாகக் கூறிய மோடி!