விமானம் அருகே தீப்பிடித்து எரிந்த 'ஏர் இந்தியா' பேருந்து! டெல்லியில் பரபரப்பு! பயணிகள் கதி என்ன?

Published : Oct 28, 2025, 02:29 PM IST
Air India Bus Fire

சுருக்கம்

டெல்லி விமான நிலையத்தில் விமானம் அருகே ஏர் இந்தியா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்துக்கு காரணம் என்ன? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி விமான நிலையத்தில் இன்று ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3 (T3)-ல், ஏர் இந்தியா சாட்ஸ் (AI SATS) என்ற தரைவழிச் சேவை வழங்கும் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று, இன்று காலை விமானம் நிறுத்துமிடம் எண் 32 (bay no 32)-க்கு அருகில் தீப்பிடித்தது.

ஏர் இந்தியா பேருந்து தீப்பிடித்தது

பயணிகளை ஏற்றிச்செல்லும் அந்த பேருந்து தீப்பிடித்தபோது நல்ல வேளையாக பயணிகள் யாரும் இல்லை. இல்லாவிடில் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இதேபோல் தீப்பிடித்து எரிந்த பேருந்துக்கு சில மீட்டர்கள் தொலைவிலேயே விமானம் ஒன்று இருந்தபோதிலும், நல்ல வேளையாக அந்த விமானத்துக்கும் சேதம் ஏற்படவில்லை.

யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

தீ விபத்து ஏற்பட்டவுடன் விமான நிலைய காவலர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 'தீ விபத்து உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அருகில் இருந்த விமானங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை' என்று டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கு காரணம் என்ன?

பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. விமான நிலைய அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர்.

அடிக்கடி சர்ச்சையை சந்திக்கும் ஏர் இந்தியா

நாட்டையே உலுக்கிய இந்த விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இப்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தும் தீப்பிடித்து எரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!