
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை இன்று நள்ளிரவு முதல் தொடங்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.
இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, இறுதியான வாக்காளர் பட்டியல் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதாவது:
சரியான வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதற்கான பணி நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்டமாக, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. கடந்த 1951 முதல் 2004 வரை 8 முறை சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது 9வது முறையாகும்.
வாக்காளர் சரிபார்ப்புப் பணி சுமார் 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. தகுதியான எந்த ஒரு வாக்காளரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. வாக்காளர்களை உறுதி செய்வதற்காகத் தேர்தல் அதிகாரிகள் 3 முறை வீடுகளுக்கு நேரடியாக வந்து சரிபார்ப்பார்கள். வாக்காளர் தகுதியை உறுதி செய்ய, ஆதார் உட்பட 12 வகையான ஆவணங்கள் பெறப்படும்.
தீவிர வாக்காளர் சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ள இந்த 12 மாநிலங்களில் இன்று (அக்டோபர் 27) இரவு 12 மணியிலிருந்து வாக்காளர் பட்டியலில் எந்தவிதமான மாற்றங்களும் முழுமையாக நிறுத்தப்படும்.
தீவிர திருத்தப் பணிகள் முடிந்து வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில்தான் இந்த 12 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.