காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஜீப் ரேங்லர் காரில் அழைத்து சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, தற்போது பீகார் மாநிலத்தில் உள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்த மறுநாளான ஜனவரி 29ஆம் தேதியன்று ராகுலின் யாத்திரை பீகார் மாநிலத்திற்குள் ராகுலின் நியாய யாத்திரை நுழைந்தது. அதன்பிறகு, மீண்டும் மேற்குவங்க மாநிலம் சென்ற அவரது யாத்திரை ஜார்கண்ட் மாநிலத்தை முடித்துக் கொண்டு தற்போது மீண்டும் பீகார் மாநிலத்தில் பயணப்பட்டு வருகிறது.
இந்த யாத்திரையில் கலந்து கொள்ள பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டீரிய ஜனதாதள கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பீகார் மாநிலத்தின் சசராமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி யாதவ் இணைந்து கொண்டார். அப்போது, ராகுல் காந்தியை தேஜஸ்வி யாதவ் ஜீப் ரேங்லர் காரில் அழைத்து சென்றார். காரை தேஜஸ்வி யாதவ் ஓட்ட, அருகில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி அவருடன் பேசிக் கொண்டு வருகிறார், இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சொந்தமாக கார் கிடையாது!
இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகிய பின்னர், ராகுலும், தேஜஸ்வி யாதவும் இணைந்து பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறை. ராகுல் காந்தியின் நியாய யாத்திரை பீகாரில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 4 மணியளவில் உத்தரப்பிரதேசம் செல்கிறது. உத்தரபிரதேச மாநிலம் சந்தோலியில், தனது சகோதரர் ராகுலை பிரியங்கா காந்தி வரவேற்கவுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராகுலுடன் இணைந்து பிரியங்கா காந்தியும் நியாய யாத்திரை மேற்கொள்வார் என தெரிகிறது.
सासाराम, से भारत जोड़ो न्याय यात्रा की आज की शुरुआत pic.twitter.com/2EFQnuEmRg
— Tejashwi Yadav (@yadavtejashwi)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற 25ஆம் தேதி வரை ராகுலின் யாத்திரை செல்லவுள்ளது. இடையில், 22, 23 ஆகிய தேதிகளில் இடைவெளி விடப்பட்டாலும், உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே இருக்கும் ராகுலின் யாத்திரை குழு, பிப்ரவரி 25ஆம் தேதி மாலை வரை அம்மாநிலத்தில் இருக்கும்.
காங்கிரஸ் வங்கி கணக்குகளை இயக்க தீர்ப்பாயம் அனுமதி!
முன்னதாக பீகாரின் அவுரங்காபாத்திற்கு ராகுலின் யாத்திரை சென்றது. அங்கு தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி பேசிய ராகுல் காந்தி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் நிதிநிலை ஆய்வு நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.