காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக அகக்ட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் இன்று தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்களது காசோலைகலை வங்கிகள் ஏற்கவில்லை என்ற தகவல் நேற்று எங்களுக்கு கிடைத்தது. இதுபற்றி விசாரணை நடத்தியதில், இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தெரிய வந்தது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.” என்றார்
மேலும் 2018-19 நிதியாண்டு கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி வருமான வரித்துறை ரூ. 210 கோடி அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்த அஜய் மக்கான், 45 நாட்கள் தாமதமாக சமர்ப்பித்ததற்கு வங்கிக் கணக்குகளை முடக்குவது தீவிர நடவடிக்கை என்றார். இதுபோன்று தாமதமாக தாக்கல் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கு உதாரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டு!
தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் கணக்கு முடக்கப்படுவது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம் என்ற அஜய் மக்கான், வருமான வரித் துறையின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து சந்தேகம் எழுப்பினார். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், மின்சாரக் கட்டணம் செலுத்தவோ, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவோ தங்களிடம் பணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தேர்தல் பத்திரங்கள் 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது' என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பாஜகவுக்கு எதிரானதாக பார்க்கப்படும் நிலையில், பிற கட்சிகளின் நிதி சேகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே, வங்கிக் கணக்குகள் முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
திசை மாறுகிறாரா கிருஷ்ணசாமி? யாருடன் கூட்டணி?
இந்த தகவலை காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் தங்கா உறுதி படுத்தியுள்ளார். மொத்தம் நான்கு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கட்சியின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தீர்பாயத்தில் வாதிட்டார். அவரது வாதத்தை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை தற்காலிகமாக இயக்க அனுமதி அளித்துள்ளது.
தீர்ப்பாயம் உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த இடைக்கால உத்தரவு மீதான விசாரணை வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.