புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு விடை கொடுத்த பின்பு முதல் முறையாக இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செயல்படத் தொடங்குகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் இருந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சிறப்புக் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
காலை 9:15 மணிக்கு நடந்த புகைப்பட அமர்வுக்குப் பின் பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைக் கூறி தனது உரைத் தொடங்கினார்.
undefined
"விநாயகர் சதுர்த்தியில் புதிய மசோதாக்களை கொண்டுவருவது சிறப்பானது. புதிய நாடாளுமன்றத்திற்கு உங்கள் அனைவரையும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். பல வகையில் இது முன் எப்போதும் இல்லாத நிகழ்வு. அமிர்த காலத்திற்கான விடியல் இது" என்று கூறினார்.
"நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை உருவாக்கிய தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி" எனவும் பிரதமர் கூறினார்.
பின்னர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பற்றிப் பேசிய அவர், "விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் கோலோச்சுகின்றனர். மகளிர் மேம்பாடு என பேசிக்கொண்டிருப்பதைவிட அதை செயல்படுத்துவது அவசியம். இதனால் தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்" என்றார்.
"கொள்கைகள் வேறு வேறாக இருக்கலாம், ஆனால் நாடு முன்னேறி செல்ல வேண்டும் என்பதில் தான் நமது நோக்கம் இருக்க வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவத்தை மறந்து முன்னேற்றத்திற்கான பாதையில் பயணிக்க வேண்டும். அரசின் மசோதாக்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
"பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா பற்றிய விவாதம் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. நமது கனவு நிறைவேறாமல் போனது. ஆனால், இன்று அந்த வாய்ப்பை கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். புதிய மசோதா இன்று இரண்டு அவைகளிலும் கொண்டுவரப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.