தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்று வரலாற்றில் இடம்பிடித்த தமிழிசை

By karthikeyan VFirst Published Sep 8, 2019, 11:30 AM IST
Highlights

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநராக பதவியேற்ற தமிழிசைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 
 

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். 

ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்திற்கென தனி ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அண்மையில் 6 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமன அறிவிப்பை வெளியிட்டிருந்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். 

அதில் தெலங்கானா மாநில ஆளுநராக, தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டிருந்தார். தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகினார். 

இந்நிலையில், இன்று தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில ஆளுநராக பொறுப்பேற்று கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் தமிழிசை. தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். 

தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றதும் தனது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி ஆனந்தனின் காலில் விழுந்து தமிழிசை ஆசீர்வாதம் வாங்கினார். தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற தமிழிசைக்கு மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தெலங்கானா மாநிலத்தின் மற்ற அமைச்சர்களும் விழாவில் கலந்துகொண்டனர். 

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர். 
 

click me!